காதல் திருமணம் செய்த மறுநாளே மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள வளவனூர் பகுதியில் லாரி டிரைவரான வெற்றிவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக வெற்றிவேல் அதே பகுதியில் வசிக்கும் தரணி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் பெற்றோர் எதிர்ப்பை மீறி காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி திருவந்திபுரம் கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளனர். இதனையடுத்து காதல் ஜோடி விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். அதன் பிறகு காவல்துறையினர் இரு வீட்டாரையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது தரணி தான் பெற்றோருடன் செல்வதாகவும், வெற்றி வேலுடன் செல்ல எனக்கு விருப்பமில்லை எனவும் எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்துள்ளார்.
இதனால் தரணியின் பெற்றோர் அவரை அழைத்து சென்றுவிட்டனர். இந்நிலையில் தான் காதலித்து திருமணம் செய்த பெண் உடனே தன்னைவிட்டு பிரிந்து சென்றதை நினைத்து மன உளைச்சலில் இருந்த வெற்றிவேல் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வெற்றிவேலின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.