ஸ்ரீவில்லிபுத்தூர் நாகலாபுரத்தில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையை முருகன் என்பவர் நடத்தி வருகிறார். இந்த பட்டாசு தொழிற்சாலை ஆரம்பித்து கிட்டத்தட்ட 2 வருடங்கள் ஆகிவிட்டது. பட்டாசு தொழிற்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். புத்தாண்டை முன்னிட்டு 80 பேர் வேலை பார்த்து வந்தனர். இந்த பட்டாசு தொழிற்சாலையில் 23 அறைகள் உள்ளன.
இன்று காலையில் கெமிக்கல் கலக்கும் அறையில் திடீரென மருந்துப் பொருள்களை கலக்கும் போது வெடிவிபத்து ஏற்பட்ட பயங்கர சத்தம் கேட்டது. வெடி விபத்தில் அந்த அறை முழுவதும் தரைமட்டமானது. மேலும் கெமிக்கல் கலக்கும் கட்டிடத்தில் மொத்தம் 7 அறைகள் இருந்தன. இந்த அறையில் 20 பேர் பணியாற்றி வந்தனர். இந்த நிலையில் அந்த அறை முழுவதும் தரைமட்டமானது. தொடர்ந்து அருகிலிருந்த அறைகளில் இருந்து வேலை பார்த்தவர்கள் தப்பித்தோம் பிழைத்தோம் என்று வெளியே ஓடி விட்டனர்.
இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் ஆம்புலன்ஸ் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மீட்பு பணியின் போது 3 உடல்கள் எடுக்கப்பட்டது. இடிபாடுகளுக்குள் சிக்கி 8 பேர் படுகாயத்துடன் சிவகாசி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் 1 உடல் தேடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஒருவரும் பலியானார். மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்தில் 5 பேர் பலியாகியுள்ளனர். 8 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.