கல்லூரி மாணவர் இரவு நேரத்தில் ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கோலியனூர் பகுதியில் மகேந்திரா என்பவர் வசித்து வருகிறார். இவர் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் மகேந்திரா தனது சாதி சான்றிதழ் வழங்குமாறு கடந்த 10 நாட்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்துள்ளார். அந்த மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் 31.12.2021 தேதிக்குள் மகேந்திராவுக்கு சாதி சான்றிதழ் வழங்குமாறு விழுப்புரம் கோட்டாட்சியருக்கு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் விழுப்புரம் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு சாதி சான்றிதழ் வாங்குவதற்காக சென்ற மகேந்திரா நீண்ட நேரமாக காத்திருந்தும் அதிகாரிகள் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.
இதனால் மகேந்திரா இரவு 10 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் நுழைவு வாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை பார்த்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும் மகேந்திரா அதனை ஏற்றுக்கொள்ளாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் காவல்துறையினர் அவரை வலுக்கட்டாயமாக தூக்கி சென்று அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர். இதற்கிடையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் மகேந்திராவை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.