புதுப்பெண்ணின் கழுத்தை நெரித்து கணவர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள அய்யங்கோட்டை கிராமத்தில் சுதா என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சுதாவுக்கு பெயிண்டரான நாகவேல் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு பிறகு தனிக்குடித்தனம் செல்ல வேண்டுமென சுதா தனது கணவரிடம் கூறியதால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வேலை முடிந்து நாகவேல் வீட்டிற்கு வந்த பிறகு தனிக்குடித்தனம் செல்வது குறித்து தம்பதியினருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது கோபத்தில் நாகவேல் சுதாவின் கழுத்தை நெரித்ததால் சம்பவ இடத்திலேயே மூச்சுத்திணறி அவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுதாவின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதற்கிடையில் தனது மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டதாக கூறி நாக வேல் காவல் நிலையத்தில் சரண் அடைந்துவிட்டார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நாக வேலை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அதாவது குடும்பத்தினரின் வற்புறுத்தலால் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நாகவேல் சுதாவை திருமணம் செய்து கொண்டார். இதனை அடுத்து செல்போனில் அடிக்கடி பேசி கொண்டிருந்த சுதாவை நாகவேல் கண்டித்துள்ளார். அதன்பின் தனிக்குடித்தனம் செல்வது குறித்து தகராறு ஏற்பட்டபோது நாகவேல் சுதாவின் கழுத்தை நெரித்து கொன்றது தெரியவந்துள்ளது.