கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு விழாக்களில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருகை புரிவார்கள். இந்த வருடத்துக்கான மகர விளக்கு பூஜை வருகிற 14ம் தேதி நடைபெற இருக்கிறது. இதனையொட்டி கடந்த 30-ம் தேதி மாலை கோவில் நடை திறக்கப்பட்டு நேற்று அதிகாலை முதல் பக்தர்கள் கோவிலுக்கு அனுமதிக்கப்பட்டனர். மகர விளக்கு விழா நாட்களில் தினசரி 60 ஆயிரம் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல தேவசம் போர்டு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் கோவிலுக்கு செல்வதற்கு உடனடி முன்பதிவு செய்வோர் அனைவரும் தற்போது தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இவ்வாறு கோவிலுக்கு செல்ல கூடுதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதால் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனையடுத்து பம்பையிலிருந்து சன்னிதானம் செல்லும் எருமேலி பெருவழிப் பாதையும் திறந்து விடப்பட்டுள்ளது. பெருவழி ப்பாதை வழியே செல்லும் பக்தர்கள் 18-ம் படி ஏறி அய்யப்பனை தரிசனம் செய்து திரும்புகிறார்கள். இதனிடையில் சபரிமலை சன்னிதானம் தினசரி அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். அதன்பின் இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.
தற்போது பக்தர்கள் வருகையானது அதிகரித்து உள்ளதால் கோவில் நடை அடைக்கும் நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி இரவு 11 மணி வரையிலும் நீட்டிக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்நிலையில் கோவில் நடை அடைக்கும் நேரம் நீட்டிக்கப்படுவது இன்று முதல் அமலுக்கு வருவதாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று ஆங்கில புத்தாண்டு என்பதாலும், நாளை விடுமுறை நாள் என்பதாலும் கோவிலில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. எனினும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சரண கோஷம் முழங்க அய்யப்பனை தரிசனம் செய்தனர்.