தொழிலாளி தனது குடும்பத்தினருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள அம்மாபேட்டை பகுதியில் சபரீஸ்வரன்-சௌமியா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து சபரீஸ்வரன் கூறும் போது, பாலிதீன் பை தயாரிக்கும் ஒரு நிறுவனத்தில் நான் வேலை பார்த்து வந்தேன். கடந்த ஆண்டு வேலை பார்த்து கொண்டிருந்தபோது மெஷினில் சிக்கி எனது 2 கைவிரல்கள் துண்டானதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளேன்.
இதற்காக 50 ஆயிரம் ரூபாய் செலவாகியுள்ளது. அந்த நிறுவனத்தின் உரிமையாளர் மருத்துவ செலவுக்கு தேவையான பணத்தை தருவதாக கூறியுள்ளார். ஆனால் 1 வருடம் ஆகியும் நிவாரண தொகையை வழங்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமிருந்து நிவாரண தொகையை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தம்பதியினர் வலியுறுத்தியுள்ளனர். இதையடுத்து காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு தொழிலாளி தனது குடும்பத்தினருடன் அங்கிருந்து சென்றுள்ளார்.