சென்னை திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வாகவும், திமுக இளைஞரணி செயலாளராகவும் வலம் வரும் உதயநிதி ஸ்டாலின் விரைவில் அமைச்சராக வேண்டும் என்று பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சில மாதங்களுக்கு முன்பு கூறியிருந்தார். அதனை தொடர்ந்து உதயநிதியின் தாயார் துர்கா ஸ்டாலின் தனது மகனை அமைச்சராக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தீவிரமாக இருப்பதாக ஸ்டாலினுடைய நெருங்கிய உறவினர்கள் சிலர் கூறுகின்றனர்.
அதாவது காரணம் என்னவென்றால் முதல்வர் ஸ்டாலின் தனது 68 வயதில் ஓய்வின்றி ஆட்சி, கட்சி என இரண்டையுமே பார்த்துக்கொள்வது மிகவும் சிரமம் என்பதால் தான் தனது மகனை அமைச்சராக்க துர்கா ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதோடு மட்டுமில்லாமல் கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது ஆட்சியிலும் கட்சியிலும் ஸ்டாலின் பட்ட கஷ்டங்கள் கட்சிக்குள்ளும், குடும்பத்துக்குள்ளும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
அதனை கண்கூடாக பார்த்ததால் தான் தனது மகனுக்கும் அந்த நிலைமை வந்துவிட கூடாது என்பதில் துர்கா ஸ்டாலின் தீர்மானமாக உள்ளாதாக கூறப்படுகிறது. ஆனால் தனது சொந்த மகனை அமைச்சராக்குவது என்பது ஸ்டாலினுக்கு சுலபமான காரியம் அல்ல. ஏனென்றால் திமுக கட்சியில் சீனியராக இருக்கும் டி.ஆர்.பாலு என்பவர் மன்னார்குடி எம்.எல்.ஏ.வாக வலம் வரும் தனது மகன் ராஜாவுக்கு அமைச்சரவையில் இடம் கேட்டுள்ளார்.
ஆனால் கட்சியின் தலைமையோ நீங்கள் நாடாளுமன்ற திமுக எம்.பி.க்கள் குழு தலைவர், கட்சி பொறுப்பாளர் என இரண்டு முக்கிய பதவிகளில் இருக்கும் போது தங்களுடைய மகனுக்கு அமைச்சரவையில் இடம் அளிப்பது என்பது சரியாக இருக்காது என்று கூறி அவருடைய கோரிக்கையை நிராகரித்துவிட்டது. இதன் காரணமாக டி.ஆர்.பாலு டென்ஷனில் உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் தமிழக அளவில் 2021 சட்டமன்ற தேர்தலில் அதிக வாக்குகளை பெற்று வெற்றியை பெற்ற ஐ.பெரியசாமி, கேபினட்டில் தனக்கு மிகப்பெரிய பதவி வேண்டும் என்று கேட்டுள்ளார்.
ஆனால் கட்சியின் தலைமையோ அதெல்லாம் முடியாது என்று கூறிவிட்டது. எனவே ஐ.பெரியசாமி, டி.ஆர்.பாலு உள்ளிட்ட சீனியர்களுக்கு அமைச்சரவை விஷயத்தில் அதிருப்தி ஏற்பட்டுள்ள நிலையில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவது என்பது அசாத்தியமான விஷயம் என்று கூறப்படுகிறது. ஆனால் துர்கா ஸ்டாலின் அந்த சீனியர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி எப்படியாவது உதயநிதியை அமைச்சராக்கி விட வேண்டும் என்று பக்கா பிளானில் உள்ளாராம்.
அதேபோல் யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை உதயநிதியை அமைச்சர் பதவியில் வைத்து அழகு பார்க்க வேண்டும் என்பதில் துர்கா ஸ்டாலின் உறுதியாக உள்ளார். எனவே தனது மகன் உதயநிதியை, திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவடையும்போது அமைச்சராக்க துர்கா ஸ்டாலின் நாள் குறித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே திமுக அமைச்சரவையில் ஸ்டாலின் தலைமையில் மொத்தம் 34 அமைச்சர்கள் இருக்கின்றனர். ஆனால் கட்சியில் உள்ள மொத்த எம்.எல்.ஏ.க்களில் 15% பேர் மட்டுமே அமைச்சர் பதவியில் இருக்க முடியும். எனவே மகன் உதய நிதி அமைச்சராக வேண்டுமென்றால் திமுக கட்சியில் யாராவது ஒரு அமைச்சர் பதவி விலக வேண்டும். எனவே உதயநிதி ஸ்டாலினுக்காக பலியாகப் போகும் அந்த ஆடு யார் ? என்பது தான் தற்போது திமுகவில் அனலாய் எழுந்துள்ள கேள்வி ஆகும்.