நேற்று செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மக்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். அதனைத் தொடர்ந்து பேசிய அவர் தமிழக மக்கள் சமூகநீதியை காக்கும் வகையில் திமுகவை ஆட்சியில் அமர்த்தியுள்ளார்கள். அதேபோல் முதல்வர் ஸ்டாலினும் இந்தியாவே புகழ்ந்து பேசும் வகையில் சிறப்பாக செயலாற்றி வருகிறார். அதோடு மட்டுமில்லாமல் தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை ‘அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்’ என்ற சட்டத்தின் மூலம் நீக்கியுள்ளார்.
அதேபோல் தமிழ்தாய் வாழ்த்து, கோவில் நிலம் மீட்பு என திமுகவின் சாதனைகள் எக்கச்சக்கமாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஆனால் ஒன்றிய அரசின் அசாதாரண போக்கால் கிட்டத்தட்ட 16 மாணவர்கள் நீட் தேர்வு காரணமாக பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் மோடி அரசு வேளாண் சட்ட போராட்டத்தில் விவசாயிகளின் எழுச்சியால் வீழ்ந்தது. அதோடு மட்டுமில்லாமல் தமிழக மீனவர்கள் மீதான இலங்கையின் அத்துமீறல் மற்றும் அடக்குமுறை ஆகியவற்றை ஒடுக்க பாஜக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கடந்த டிசம்பர் மாதம் மேகதாது விவகாரம் தொடர்பில் நடைபெற இருந்த கூட்டமும் ரத்தானது. தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து மோடி அரசு சூசகமாக ஏமாற்றி வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் பிரதமர் மோடி பாராளுமன்றத்தை முற்றிலுமாக புறக்கணிக்கிறார். அமித்ஷாவும், மோடியும் பாராளுமன்ற ஜனநாயகத்தை அழித்து ஒழிக்கும் வேலையை தான் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று ஆவேசமாக பேசியுள்ளார்.
மேலும் ஒன்றிய அரசு தமிழகத்திற்கு கேடு விளைவிக்கும் பாதகமான செயல்களை தான் தொடர்ந்து செய்து வருகிறது. இந்த செயல்களை நிறுத்தினால் மட்டுமே தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து முழுமையான விலக்கு கிடைக்கும் என்று கூறியுள்ளார். இந்த நிலையில் பொங்கலை முன்னிட்டு தமிழகத்திற்கு வருகை தரும் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிப்பது குறித்து திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளுடன் கலந்து ஆலோசித்த பிறகு முடிவு எடுக்கப்படும் என்றும் திட்டவட்டமாக பேசியுள்ளார்.