கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு விழாக்களில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருகை புரிவார்கள். இந்த வருடத்துக்கான மகர விளக்கு பூஜை வருகிற 14ம் தேதி நடைபெற இருக்கிறது. இதனையொட்டி கடந்த 30-ம் தேதி மாலை கோவில் நடை திறக்கப்பட்டு நேற்று அதிகாலை முதல் பக்தர்கள் கோவிலுக்கு அனுமதிக்கப்பட்டனர். மகர விளக்கு விழா நாட்களில் தினசரி 60 ஆயிரம் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல தேவசம் போர்டு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் கோவிலுக்கு செல்வதற்கு உடனடி முன்பதிவு செய்வோர் அனைவரும் தற்போது தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜையை முன்னிட்டு நாள்தோறும் கூடுதலாக 1 மணி நேரம் பக்தர்கள் தரிசனம் செய்ய தேவசம்போர்டு அனுமதி வழங்கியுள்ளது. மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட முதல் நாளிலேயே கூட்டம் அலை மோதியது. இதன் காரணமாக பக்தர்கள் நலன் கருதி தினசரி அதிகாலை 4 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என அறிவித்துள்ளது.