நகை கடை சுவரில் துளையிட்டு மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சின்னபாளேதோட்டம் பகுதியில் கேசவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மத்தூர் பேருந்து நிறுத்தம் அருகில் நகை கடை வைத்து நடத்தி வருகின்றார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் நகைக்கடை சுவற்றில் துளையிட்டு உள்ளே செல்ல முயற்சி செய்துள்ளனர். இந்த சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்றதால் மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியை கைவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்றனர். இதனால் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் தப்பிவிட்டது.
இதுகுறித்து கேசவன் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கடையை பார்வையிட்டுள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை பதிவு செய்து மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.