Categories
உலக செய்திகள்

“அடக்கடவுளே!”…. பெத்த பொண்ண ‘திருடன்’ என நினைத்து…. தந்தை செய்த கொடூரம்…. அமெரிக்காவை அதிர வைத்த சம்பவம்….!!!!

அமெரிக்காவில் பெற்ற மகளை திருடன் என நினைத்து தந்தை செய்த கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள கொலம்பஸ் நகரில் வசித்து வரும் ஹரிஸ்டன் என்பவருக்கு ஜெனி ( வயது 16 ) என்ற மகள் இருந்தார். கடந்த 25-ஆம் தேதி அன்று கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக ஜெனி தனது நண்பர்கள் வீட்டிற்கு சென்றிருந்தார். இந்நிலையில் ஹரிஸ்டன் மற்றும் அவருடைய மனைவி இருவரும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை முடித்துவிட்டு இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.

இதையடுத்து ஜெனி நண்பர்களுடன் கிறிஸ்துமஸை ஜாலியாக கொண்டாடிவிட்டு மறுநாள் அதிகாலை 4 மணி அளவில் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். மேலும் ஜெனி வீட்டின் பின்புறம் வழியாக வீட்டிற்குள் செல்ல முயற்சித்துள்ளார். ஆனால் அந்த சத்தத்தை கேட்டு அது திருடனாக இருக்குமோ ? என்று தவறுதலாக எண்ணிய ஜெனியின் தந்தை வேகமாக கையில் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு வீட்டின் பின்புறம் சென்றுள்ளார்.

அங்கு இருட்டில் நின்று கொண்டிருந்த ஜெனியின் உருவத்தை பார்த்து யாரோ ஒரு நபர் தான் வீட்டிற்குள் நுழைய முயற்சி செய்கிறார் என்று எண்ணி கையில் இருந்த துப்பாக்கியை கொண்டு சுட்டுள்ளார். இந்த கொடூர சம்பவத்தில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த ஜெனி குண்டு பாய்ந்த வேகத்தில் கதறி அழுதுள்ளார். இது தனது மகளின் குரல் என்பதை உணர்ந்த ஹரிஸ்டன் அருகில் சென்று பார்த்துள்ளார்.

அப்போது ஜெனி ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஹரிஸ்டன் உடனடியாக ஆம்புலன்சுக்கு கால் செய்துள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த மருத்துவ ஊழியர்கள் மற்றும் காவல்துறையினர் ஜெனியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அடுத்த சில நிமிடங்களிலேயே ஜெனி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.

இதற்கிடையே காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பில் வழக்கு பதிந்து ஜெனியின் தாயார் மற்றும் தந்தை இருவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஜெனி அதிகாலை வேளையில் எதற்காக வீட்டின் பின்புறம் சென்றார் ? உள்ளிட்ட பல கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் பெற்ற மகளை திருடன் என நினைத்து தந்தையே துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |