தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் ஒவ்வொரு வருடமும் விருப்ப பணியிட மாறுதல் மற்றும் பொது மாறுதல் வழங்கப்படுவது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பணியிட மாறுதல் மற்றும் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படவில்லை. இந்நிலையில் பொது மாறுதல் கலந்தாய்வு வருகிற ஜனவரி மாதம் நடத்தப்படும் என்று தகவல் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வுக்கு வருகின்ற ஜனவரி 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக் கல்வி இயக்குனர் நந்தகுமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள, இந்த ஆண்டிற்கான பொதுமாறுதல் கலந்தாய்வு எமிஸ் இணையதளம் வாயிலாக நடத்தப்பட உள்ளது. அதில் பங்கேற்க உள்ள ஆசிரியர்கள் அனைவரும் வருகின்ற ஜனவரி 7ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பதிவு செய்யப்பட்ட அனைத்து வகை ஆசிரியர்களின் மாறுதல் விண்ணப்பங்களில் முன்னுரிமை பட்டியல் வருகின்ற ஜனவரி 10ஆம் தேதி வெளியிடப்படும். அதில் ஏதாவது திருத்தங்கள் இருந்தால் அதனை மாற்றும் பணிகள் மறுநாள் நடைபெறும். இறுதி முன்னுரிமை பட்டியல் வருகின்ற ஜனவரி 13 ஆம் வெளியிடப்படும். அதன்பிறகு அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதுநிலை, பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு இடமாறுதல், பதவி உயர்வு மற்றும் பணி நிரவல் கலந்தாய்வுக்கு வருகின்ற ஜனவரி 19ஆம் தேதி முதல் பிப்ரவரி 18 ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.