தன்னை வேலைக்கு அழைத்து செல்லாத காரணத்தினால் நண்பனை வாலிபர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் மெயின் ரோடு பகுதியில் சிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மேஸ்திரி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் கொத்தனார் மேஸ்திரி சுமன் என்பவரும் இவரும் தொழில் ரீதியாக நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இதனால் இருவரும் வேலைக்கு சேர்ந்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.
இந்நிலையில் நண்பர் சுமனை கொத்தனார் வேலைக்கு சிராஜ் அழைத்து செல்லவில்லை என கூறப்படுகிறது. இதில் கோபமடைந்த சுமன் சிராஜை தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இச்சம்பவத்தில் படுகாயமடைந்த சிராஜ் வலி தாங்க முடியாமல் கத்தி உள்ளார். பின்னர் இவரின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதைக் கண்ட சுமன் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
பின்னர் படுகாயம் அடைந்த சிராஜை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு மருத்துவர்களால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.