கண்மாய்க்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி 8 கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிலுக்குவார்பட்டியில் மன்னவராதி கண்மாய் அமைந்துள்ளது. இந்த கண்மாய் மூலம் சிலுக்குவார்பட்டி, கவிராயபுரம், சீரங்கபட்டி உள்ளிட்ட 8 கிராமங்கள் பாசன வசதி பெறுகிறது. கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் நிலக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் கண்மாய்கள் நிரம்பிவிட்டது. ஆனால் சிலுக்குவார்பட்டி மன்னவராதி கண்மாய்க்கு மட்டும் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. இதுகுறித்து விவசாயிகள் அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனு அளித்த பிறகு தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆனால் கண்மாய்க்கு வரும் வரத்து கால்வாயில் உடைப்பை ஏற்படுத்தி வேறு கண்மாய்க்கு தண்ணீரை திருப்பி விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் கோபமடைந்த 8 கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மதுரை-நிலக்கோட்டை சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது மன்னவராதி கண்மாய்க்கு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்த பிறகு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.