12 மணி நேரம் தொடர்ந்து ஓவியம் வரைந்து சாதனை படைத்த மாணவியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விஜய் ரங்காபுரம் ஊராட்சி மீனாட்சிபுரத்தில் ஐயனார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புவனேஸ்வரி என்ற மகள் உள்ளார். இவர் சென்னையில் இருக்கும் தனியார் கல்லூரியில் ஆர்கிடெக்சர் 3-வது ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் 12 மணி நேரம் ஓவியம் வரையும் போட்டியில் கலந்து கொள்வதற்காக மாணவி இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளார். இதனை ஏற்று கொண்ட நிறுவனம் 12 மணிநேரம் ஓவிய போட்டியை வீடியோ பதிவு செய்து அனுப்புமாறு தெரிவித்துள்ளனர்.
அதன்படி மாணவி காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை நிறுத்தாமல் ஓவியங்களை வரைந்து அதனை பதிவு செய்து இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்திற்கு அனுப்பியுள்ளார். இதனை ஏற்றுக்கொண்ட நிறுவனம் மாணவியின் சாதனைக்காக சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கியுள்ளனர். இந்த மாணவிக்கு அனைவரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.