Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“உணவை வீணாக்காமல் பகிர்வோம்” உரிமம் இல்லையென்றால் நடவடிக்கை…. சிறப்பாக நடைபெற்ற கூட்டம்….!!

உரிமம் பெறாமல் இறைச்சி கடைகளை நடத்தி வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் வைத்து உணவு பாதுகாப்பு துறை சார்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் பற்றி மாவட்ட அளவிலான ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கியுள்ளார். இக்கூட்டத்தில் உணவுப்பொருட்களில் கலப்படம் செய்வதை தடுத்தல் மற்றும் அதிகப்படியான செயற்கை வண்ணம் கலந்த உணவுப்பொருட்கள் கண்டறிந்து எச்சரிக்கை செய்து அதை அழித்தல் போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் உபயோகப்படுத்திய சமையல் எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதை தவிர்த்து, அதனை பயோடீசலாக மாற்ற ரிக்கோ திட்டத்தை அதிக அளவில் நடைமுறைப்படுத்துவது பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது. அதன்பின் கலெக்டர் பாலசுப்பிரமணியம் கூறியதாவது, இம்மாவட்டத்தில் பல பேக்கரி மற்றும் ஓட்டல்களில் வியாபார நோக்கத்துடன் உபயோகப்படுத்திய எண்ணையை உணவு பாதுகாப்பு துறையில் அனுமதிக்கப்படாத விற்பனையாளர்களுக்கு விற்பனை செய்வதாக பெறப்படும் புகார்கள் மீது உடன் கள ஆய்வு செய்யவும் மற்றும் தவறுகள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது வழக்கு தொடர வேண்டும் என கூறியுள்ளார்.

இதனையடுத்து “உணவை வீணாக்காமல் பகிர்வோம்” மற்றும் “சர்க்கரை, கொழுப்பு, உப்பு  இவற்றை சற்றே குறைப்போம்” இத்திட்டத்துக்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர் கூறியுள்ளார். அதன்பின் அனைத்து உணவகங்களிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பயன்படுத்த வேண்டுமெனவும், பால் விற்பனை உரிமம் மற்றும் பதிவு பெறாமல் பால் விற்பனை செய்யக்கூடாது என அவர் தெரிவித்துள்ளார். மேலும் உரிமம் மற்றும் பதிவு பெறாமல் இறைச்சி கடைகளை நடத்துவோர் மீது அலுவலர்கள் நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர்  தெரிவித்துள்ளார்.

Categories

Tech |