பல் டாக்டரின் வீட்டில் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை மாவட்டத்திலுள்ள நங்கநல்லூர் 5-வது பிரதான சாலையில் பல் டாக்டரான ஜனார்த்தனன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவியுடன் அமெரிக்காவில் வசிக்கும் தனது மகனை பார்ப்பதற்காக சென்றுவிட்டார். இந்நிலையில் வீட்டை சுத்தம் செய்வதற்காக சென்ற வேலைக்காரப் பெண் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பழவந்தாங்கல் காவல்துறையினர் ஜனார்த்தனை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசிய போது வீட்டில் வெள்ளி பூஜை பொருட்கள் மற்றும் 2 தங்க மோதிரம் இருந்ததாக தெரிவித்துள்ளார். மேலும் ஜனார்த்தனன் சென்னைக்கு திரும்பி வந்தால்தான் மர்மநபர்கள் வீட்டில் கொள்ளையடித்து சென்ற பொருட்களின் விவரம் தெரியவரும். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.