தமிழகம் முழுவதும் இன்று ஹனுமான் ஜெயந்தி கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1,00,008 வடை மாலை சாத்தப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டன. இதையடுத்து அலங்கரிக்கப்பட்டிருந்த ஆஞ்சநேயர் இன்று அதிகாலை 5 மணிக்கு பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதி வேந்தன், மாநிலங்களவை உறுப்பினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, திமுக அரசு ஆன்மீகத்திற்கு எதிரானது அல்ல; திமுக ஆட்சிக்கு வந்தபின் 437 பேரிடம் இருந்து 1,640 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். மேலும் மத்திய அரசின் நல்ல திட்டங்களுக்கு தமிழக முதலமைச்சர் ஆதரவளிப்பார் எனவும் மக்களை பாதிக்கும் திட்டம் என்றால் அதை எதிர்ப்பார் என்றும் கூறினார்.