Categories
தேனி மாவட்ட செய்திகள்

மணல் அள்ளுவதற்கு ஆதரவு…. பொதுமக்கள் போராட்டம்…. காவல்நிலையத்தில் பரபரப்பு….!!

பறிமுதல் செய்யப்பட்ட டிராக்டரை ஒப்படைக்க வலியுறுத்தி கிராம மக்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அடுத்துள்ள பாலக்கோம்பை கிராமத்தில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள ஓடையில் 2 டிராக்டர்களில் மணல் அள்ளிக்கொண்டிருந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அங்கு சென்று மணல் அள்ளிய 2 டிராக்டர் டிரைவர் மீது வழக்குபதிவு செய்து, மணல் அள்ளுவதற்கு பயன்படுத்திய டிராக்டர்களை பறிமுதல் செய்துள்ளனர். இதனை அறிந்த பாலகோம்பை கிராம மக்கள் காவல் நிலையத்திற்கு திரண்டு சென்று டிராக்டர்களை ஒப்படைக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் பாலக்கோம்பை ஓடையில் கிராமத்தின் தேவைக்காக மட்டுமே மணல் அள்ளப்படுவதாக கூறி காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து கிராமமக்கள் நூற்றுகணக்கானோர் மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனையடுத்து மாவட்ட கூடுதல் சூப்பிரண்டு அதிகாரி சக்திவேல், ஆண்டிபட்டி துணை சூப்பிரண்டு அதிகாரி வெங்கடேசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இருப்பினும் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்று எச்சரித்த பின்னரே கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். மேலும் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்த போராட்டம் நடைபெறுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பெரும் பரபரப்பு நிலவியுள்ளது.

Categories

Tech |