தென்னந்தோப்பில் புகுந்த 10 காட்டுயானைகள் 88 தென்னை மரத்தை வேரோடு சாய்த்த சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் கூடலூர் பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மழை உள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள வயல்களில் மான், கரடி, காட்டுப்பன்றி, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவது தொடர்ந்து வருகிறது. இதனால் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் இரவு நேரத்தில் வயல்களில் தகரங்களை தட்டி ஒலி எழுப்பி வன விலங்குகளை விரட்டி வருகின்றனர். இதனையடுத்து வெட்டுக்காடு கடமங்குலம் பகுதியில் உள்ள சேது என்பவற்றின் தென்னந்தோப்பில் நேற்று 10க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் புகுந்துள்ளது.
அந்த யானை கூட்டம் தென்னந்தோப்பில் இருந்த சுமார் 88 தென்னை மரங்களை வேருடன் சாய்த்து சேதப்படுத்தியுள்ளது. இதனை அறிந்த கூடலூர் வனச்சரகர் அருண்குமார், வனவர் சிவலிங்கம் மற்றும் வனத்துறையினர் சேதமடைந்த பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டனர். அப்போது வனவிலங்குகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், வனவிலகுங்கள் விளைநிலங்களில் வருவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.