மொபட் மீது இருசக்கர வாகனம் மோதியதில் ரிக் வண்டி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள குமாரபாளையம் பகுதியில் நல்லமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். ரிக் வண்டி தொழிலாளியான இவர் தனது மொபட்டில் சித்தாளந்தூருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக நல்லமுத்து மொபட் மீது மோதியுள்ளது. இதனையடுத்து அந்த நபர் நிற்காமல் வேகமாக சென்றுள்ளார்.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த நல்லமுத்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனை அறிந்த திருச்செங்கோடு ரூரல் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த நல்லமுத்துவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.