காளை உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள செட்டிபாளையம் பகுதியில் தி.மு.க சார்பில் வருகிற 9-ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் திருச்சி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, நாமக்கல் போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் கலந்து கொள்ள தயாராக இருக்கின்றனர். இதற்கான முன்பதிவு செய்யும் பணி சில நாட்களுக்கு முன்பு தொடங்கியதால் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த காளை உரிமையாளர்கள் செட்டிபாளையத்திற்கு சென்றுள்ளனர். இந்நிலையில் வருகிற 10-ஆம் தேதி வரை தமிழக அரசு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால் ஜல்லிக்கட்டு நடைபெறுமா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. எனவே முன்பதிவுக்கான டோக்கன் வழங்கப்படாததால் காளை உரிமையாளர்கள் ஏமாற்றமடைந்தனர்.
இதனால் கோபத்தில் உரிமையாளர்கள் கொச்சி-பாலக்காடு சாலையில் அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த தி.மு.க மாவட்ட செயலாளர் மருதமலை மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி உள்ளதா என்பது குறித்து ஆலோசனை நடத்த உள்ளோம். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என கூறிய பிறகு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.