மத்திய அரசின் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் தமிழகத்தை புறக்கணித்தது பெரும் விவாதப் பொருளாக மாறியிருக்கும் நிலையில், பொங்கலுக்கு ரொக்கம் கொடுக்காததற்கு என்ன காரணம்? என்று திமுகவினர் கூறியுள்ளனர்.
தைத்திங்கள் முதல் நாளன்று தமிழர்களால் பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இப்பண்டிகைக்காக தமிழ்நாட்டில் இருக்கும் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு, சர்க்கரை, முந்திரி, பச்சரிசி, திராட்சை, ஏலக்காய் போன்ற பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்படும்.
அதன்படி இந்த வருடமும் பொங்கல் பண்டிகை அன்று 21 பொருட்கள், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இதனை, 1088 கோடி ரூபாய் செலவில் வழங்க திட்டமிடப்பட்டிருந்தது. இத்திட்டம் நாளை முதல் தொடங்க இருக்கிறது. கடந்த அதிமுக ஆட்சியில், பொங்கல் சிறப்பு தொகுப்புடன் சேர்த்து 2500 ரூபாய் தொகையும் வழங்கப்பட்டது.
ஆனால், இந்த தடவை திமுக ஆட்சி, சிறப்பு தொகை வழங்குவதாக அறிவிக்கவில்லை. இது மக்களுக்கு ஏமாற்றத்தை தந்திருக்கிறது. இது தொடர்பில் திமுக தரப்பினர் தெரிவித்திருப்பதாவது, பொங்கல் பண்டிகைக்கு என்று சிறப்பாக ரொக்கத்தொகையை கடந்த ஆட்சி வழங்கவில்லை.
கொரோனாவிற்கான நிவாரண தொகை தான் பொங்கல் சிறப்பு தொகுப்புடன் சேர்த்து வழங்கப்பட்டது. இதனை அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த எங்களின் தலைவர் முக ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார். 5000 ரூபாய் நிவாரணத் தொகை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம்.
ஆனால் 2500 ரூபாய் தான் வழங்கப்பட்டது. திமுக ஆட்சி வந்தவுடன் கொரோனா நிவாரண தொகை 4000 வழங்கப்பட்டது என்று கூறியிருக்கிறார்கள். இந்நிலையில் மத்திய அரசு இயற்கை பேரிடர் நிவாரண நிதியில் தமிழகத்தை ஒதுக்கி வைத்தது பெரும் விவாத பொருளாக மாறியிருக்கிறது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இதற்கு முன்பு இருந்ததை விட 60% அதிகமாக பெய்தது. இதனால் தமிழ்நாடு அதிக சேதத்தை சந்தித்தது. அதன்பின்பு, மத்தியகுழு மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டது. அதன்பின் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சேதமடைந்த பகுதிகளை புனரமைப்பதற்காக விரைவில் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.
எனினும் மத்திய அரசு தமிழகத்திற்கு நிதி வழங்கவில்லை என்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், பொங்கலுக்கு சிறப்பு தொகை வழங்கப்படாததற்கு மத்திய அரசு நிதி வழங்காதது காரணமாக கூறப்படுகிறது.