முன்னாள் அமைச்சரான ராஜேந்திர பாலாஜியை பெங்களூர், டெல்லி போன்ற இடங்களில் தேடி வந்த காவல்துறையினர் தற்போது கர்நாடகாவின் தங்கவயல் நகரத்தில் தேடிவருகிறார்கள்.
அதிமுக ஆட்சியின் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஆவின் போன்ற அரசு நிறுவனங்களில் பணி வாங்கி கொடுப்பதாக கூறி பண மோசடி செய்தார். எனவே காவல்துறையினர் அவரை தீவிரமாக தேடத்தொடங்கியவுடன் அவர் தலைமறைவானார். மேலும், அவர் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றத்தில் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
அதன் பின்பு அவர் தொடர்பில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். தனிப்படை காவல்துறையினர், கேரளா, கர்நாடகா, டெல்லி போன்ற பல இடங்களில் அவரை தேடினார்கள். இந்நிலையில் தற்போது ராஜேந்திர பாலாஜி பல செல்போன் எண்களில் இருந்து வழக்கறிஞர்களிடம் பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
செல்போன் எண்களை கண்டறிந்து, குறிப்பிட்ட இடத்தில் சென்று பார்த்தால் அவர் அதற்குள் அங்கிருந்து தப்பித்து விடுகிறார். எனினும் இறுதியாக டெல்லியில் இருக்கும் முக்கிய பிரமுகர் ஒருவரின் வீட்டில் அவர் இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்படி தனிப்படை காவல்துறையினர் அங்கு சென்றனர்.
ஆனால், அதற்குள் அவர் அங்கிருந்து தப்பிவிட்டார். இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் இருக்கும் கோலாருக்கு, கடந்த சனிக்கிழமையன்று கிருஷ்ணகிரி வழியாக அவர் தப்பியதாக கிடைத்த தகவலை வைத்து, தனிப்படை காவல்துறையினர் கர்நாடகாவில் இருக்கும் தங்க வயல் கோலாறு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் தேடி வருகின்றனர்.