தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி வாரந்தோறும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இதுவரை 17 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
அதுமட்டுமல்லாமல் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி இன்று தொடங்கியுள்ளது. இதற்கிடையில் நாட்டிலேயே கர்ப்பிணி பெண்களுக்கு அதிகமாக தடுப்பூசி செலுத்திய முதல் மாநிலம் தமிழ்நாடு என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். கர்ப்பிணி, பாலூட்டும் தாய், மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தியதில் தமிழ்நாடு முதலிடம் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் வரும் 10-ம் தேதி முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணியை முதலமைச்சர் தொடங்கி வைக்க இருக்கிறார் எனவும் பேசினார்.