மஹாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் கல்வா நகரில் சந்தீப் பிரஜாபதி வசித்து வருகிறார். இவருடைய மனைவி சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் ஆவார். இவருக்கு 10 வயதுள்ள ஒரு மகனும், 6 வயதுள்ள ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் சந்தீப் பிரஜபதியின் பர்சில் இருந்து அவரது 10 வயது மகன் 50 ரூபாயை எடுத்துள்ளார்.
இதனால் கோபமடைந்த சந்தீப், மகனை சரமாரியாக அடித்துள்ளார். இதனால் மயங்கி விழுந்த மகனை, சந்தீப் போர்வையில் சுருட்டி வைத்துவிட்டுச் சென்றுவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றனர். ஆனால் சிறுவன் முன்பே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து காவல்துறையினர் சந்தீப் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.