நீலகிரி: ஈளாடா பகுதியில் பொது மக்களை அச்சுறுத்தி வரும் புலியை ஏழு நவீன கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கும் பணிகள் தொடங்கின.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக வனவிலங்குகள் குடியிருப்புகளுக்குள் வருவது அதிகரித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் அச்சம் அடைந்து வரும் நிலையில் கோத்தகிரி அருகேயுள்ள ஈளாடா பகுதியில் இரண்டு புலிகள் கடந்த 15 நாட்களாக பொது மக்கள் வசிக்கும் பகுதியில் சுற்றித் திரியத் தொடங்கி உள்ளன.
பகல் நேரங்களிலேயே வனப்பகுதியிலிருந்து வெளியில் வரும் இந்தப் புலிகள் தேயிலைத் தோட்டங்களிலும், குடியிருப்புப் பகுதிகளிலும் சாதாரணமாக உலா வருகின்றன. இதனால்,பொதுமக்கள் நடந்து செல்லும் சாலையில் இந்தப் புலிகள் அடிக்கடி நடந்து செல்வதால் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தப் புலிகள் கடந்த 15 நாட்களில் அப்பகுதியில் நான்கு ஆடுகள், இரண்டு மாடுகளை வேட்டையாடி உள்ளது.
மேலும், இந்த இரண்டு புலிகளைக் கண்காணிக்க புலிகள் நடமாட்டமுள்ள பகுதிகளில் ஏழு நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. வனத்துறையினர் அந்தப் பகுதியில் ரோந்துப் பணியை மேற்கொண்டு புலியின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். பொது மக்கள் மாலை நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.