பெட்ரோல் பயன்படுத்தாமல் பேட்டரி மூலம் இருசக்கர வாகனத்தை வடிவமைத்து விவசாயி சாதனை படைத்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை அடுத்துள்ள நல்லூர் பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகின்றார். விவசாயியான இவருக்கு அன்றாட பயன்பாட்டிற்கும், விவசாய பணிகளுக்கும் இருசக்கர வாகனம் முக்கிய தேவையாக இருந்து வருகின்றது. இந்நிலையில் பெட்ரோல் விலை தற்போது 100 ரூபாயை எட்டியுள்ள நிலையில் ஒரு மாதத்திற்கு மட்டுமே 4,000 ரூபாய் பெட்ரோலுக்கு செலவாகின்றது. இதனால் நஷ்டம் ஏற்படுவதை அறிந்த பாலமுருகன் பெட்ரோல் பயன்படுத்தாமல் மின் பேட்டரிகளில் இயங்கும் இருசக்கர வாகனத்தை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
இதனையடுத்து பாலமுருகன் 48,000 ஆயிரத்திற்கு தேவையான பேட்டரி மற்றும் உதிரிபாகங்கள் ஆகியவற்றை வாங்கி பேட்டரியால் இயங்கும் இருசக்கர வாகனத்தை வடிவமைத்து சாதனை படைத்துள்ளார். இந்த பேட்டரி இருசக்கர வாகனம் மூலம் 70 கிலோ மீட்டர் தொலைவிற்கு சுமார் 250 கிலோ எடை கொண்ட கொள்ளளவை சுமந்து செல்ல முடியும் என பாலமுருகன் தெரிவித்துள்ளார். மேலும் இந்த காலகட்டத்திற்கு இது போன்ற வாகனங்களை பயன்படுத்தினால் புகை, மாசு ஏற்படாமல் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் என்றும், மாதத்திற்கு3,000 ரூபாய் வரை சேமிக்கலாம் என்றும் கூறியுள்ளார். இதனால் தனிநபர் வாழ்க்கை திறனும், நாட்டின் பொருளாதாரமும் மேம்படும் என்றும் தெரிவித்துள்ளார்.