கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்ற நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காவேரிப்பாக்கம் பகுதியில் பிரசித்தி வாய்ந்த திருப்பாற்கடல் பெருமாள் கோவில் அமைந்திருக்கிறது. இந்தக் கோவிலுக்கு செல்லும் வழியில் ஸ்ரீ துர்க்கையம்மன் கோவில் அமைந்திருக்கின்றது. இந்நிலையில் இந்த கோவிலில் மர்ம நபர்கள் உள்ளே புகுந்து சாமி சிலைகளை உடைத்து உண்டியல் பணத்தை திருடி சென்றுள்ளனர்.
இதனை அடுத்து கோவில் சிலைகள் உடைக்கப்பட்ட இடத்தில் டி.எஸ்.பி புகழேந்தி கணேஷ் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தியுள்ளார். அதன்பின் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை அவர்கள் சேகரித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. பின்னர் நாய் சிம்பா அதே பகுதியில் இருக்கும் ஒருவரின் வீட்டின் அருகில் சென்று நின்றுள்ளது. மேலும் காவல்துறையினர் அந்த நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.