வழிப்பறி கொள்ளையர்கள் தாக்கியதில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள தடாக பகுதியில் ஜான்சிராணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருமங்கலம் பகுதியை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது அதே வழியில் வந்த மற்றொரு இருசக்கர வாகனத்தில் இருந்த 2 மர்ம நபர்கள் ஜான்சிராணி கழுத்தில் அணிந்திருந்த நகையை பறிக்க முயன்றுள்ளனர். அப்போது நிலை தடுமாறி ஜான்சிராணி வாகனத்தை ஓட்டியபடி சென்றுள்ளார்.
இதனை அடுத்து அந்த 2 மர்ம நபர்கள் ஜான்சிராணியை தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் ஜான்சிராணி தடுமாறி கீழே விழுந்து தலையில் காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் சாலையில் கிடந்துள்ளார். இதைப் பார்த்த அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ஜான்சிராணி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 2 மர்ம நபர்களையும் வலைவீசி தேடி வருகின்றனர்.