பழுதடைந்த மின்மாற்றியை சீரமைக்க கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பழையூர் பகுதியில் இருக்கும் மின்மாற்றி கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பழுதடைந்துள்ளது. இதை சீரமைக்க கோரி அப்பகுதி விவசாயிகள் பொறியாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். இருப்பினும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பழுதடைந்த மின்மாற்றியின் கீழே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது மின் வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசி மின்மாற்றியை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர். ஆதலால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.