அமைச்சர் மூர்த்தி தலைமையில் சென்னை நந்தனத்தில் உள்ள ஒருங்கிணைந்த வணிகவரி வளாக கூட்டரங்கில் வணிகவரி இணை ஆணையர்களின் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அந்த ஆய்வு கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் மூர்த்தி பேசியதாவது, பதிவுத்துறையில் வருவாயை பெருக்கவும், அரசுக்கு வரவேண்டிய சரக்கு- சேவை வரியை ஒழுங்காக செலுத்தவும், ஏமாற்றுபவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கவும், ஆலோசனை நடைபெற்று வருகிறது.
மேலும் வரி ஏய்ப்பு செய்பவர்கள், சரக்கு சேவை, வரி கணக்கை ரத்து செய்யவும், மேலும் அவர்கள் மீது குண்டர் சட்டத்தில் கைது நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்துள்ளோம். மேலும் வணிகவரித் துறையில் உள்ள 12 மண்டலங்களை 19 ஆக உயர்த்தவும், வணிகவரித் துறையில் 1,000 பேருக்கு பணி உயர்வு கொடுக்கவும் முடிவு செய்துள்ளோம். வணிகவரித் துறையில் கடந்த ஆட்சியில் நடைபெற்ற மோசடி குறித்து விசாரிப்பதற்காக விரைவில் முதல்வர் ஆலோசனையின்படி குழு அமைக்கப்படும்.