வீட்டிற்கு சென்று கொண்டிருந்த வாலிபர் சுற்றுலா வேன் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராமாபுரம் புதூர் அருகே உள்ள கொல்லம் பட்டறை பகுதியில் சுதர்சன் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். பெயிண்டரான இவர் வேலையை முடித்துவிட்டு இரவு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் பொன்னேரி கைகாட்டின் அருகே உள்ள தனியார் ஸ்பின்னிங் மில் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிரே திருச்சியை நோக்கி சென்ற சுற்றுலா வேன் ஒன்று நிலைதடுமாறி சுதர்சனின் இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது.
இந்த கோர விபத்து தூக்கி வீசப்பட்ட சுதர்சன் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடியுள்ளார். இதனை பார்த்த அப்பகுதியினர் உடனடியாக சுதர்சனை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதனையடுத்து மேல்சிகிச்சைக்காக மருத்துவர்கள் அவரை சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் சிகிச்சை பலனின்றி சுதர்ஷன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து எருமப்பட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.