தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வந்தது. தற்போது கொரோனா வகை உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மக்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் கொரோனா உயர்வு மற்றும் ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மருத்துவத் துறை உயரதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இன்று காலை 11 மணியளவில் ஆலோசனை நடத்துகிறார். ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு, கொரோனா அதிகரிக்கும் மாவட்டங்கள் அளவில் கட்டுப்பாடு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படுகிறது. அதன்பிறகு முக்கிய அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ஜனவரி 10-ஆம் தேதி வரை 1 – 8 ஆம் வகுப்புக்கு பள்ளிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 9 – 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டுமே வகுப்புகள் செயல்படுகின்றன. ஜனவரி 10ஆம் தேதிக்கு பிறகு தொடர்ந்து பொங்கல் பண்டிகை விடுமுறை வருவதால் அனைத்து மாணவர்களுக்கும் (1-12 ஆம் வகுப்புவரை) ஜனவரி 19 ஆம் தேதி வரை விடுமுறை அளித்து அறிவிப்பு வெளியாகும் என்று அரசு தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.