Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் சார்-பதிவாளர் அலுவலகங்களில்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழ்நாட்டில் வீடு, மனைகள் விற்பனை குறித்த பத்திரங்கள் சார்-பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்யப்படுகின்றன. அங்கீகாரம் இல்லாத மனைகள் என்ற பெயரில் விவசாய நிலங்கள் அபகரிக்கப்படுவதாக 2016-ல் புகார் பெறப்பட்டது. இதையடுத்து அங்கீகாரம் இல்லாத மனைகள் குறித்த பத்திரங்களை பதிவுசெய்ய 2017-ல் தடை விதிக்கப்பட்டது. இதை மீறி ஏராளமானோர் சார்-பதிவாளர் அலுவலகங்களில், மனைகள் பதிவு செய்யப்பட்டதாக நகரமைப்பு துறை புகார் தெரிவித்தது.

இது தொடர்பாக சிறப்பு குழு ஆய்வு மேற்கொண்டதில் நீதிமன்ற உத்தரவையும்  மீறி 160 சார்-பதிவாளர்கள் அங்கீகாரமில்லாத மனை பத்திரங்களை பதிவு செய்தது தெரியவந்தது. அவர்களை சஸ்பெண்ட் செய்வதற்கான நடவடிக்கைகள் சில மாதங்களுக்கு முன்பு துவங்கின. இதனை தடுக்க, சார்-பதிவாளர்கள் பல்வேறு திரைமறைவு வேலைகளை செய்தனர். இந்த விபரமானது துறை அமைச்சரின் கவனத்துக்கு சென்றது.

அவர் மனை விற்பனை பதிவு மோசடியில் ஈடுபட்டவர்கள் குறித்த விபரங்களையும் திரட்டி கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதேநேரம் ரியல் எஸ்டேட் சட்டப்படி பதிவு சான்றிதழ் இல்லாத திட்டங்களில் மனை விற்பனை பதிவுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த இரு தடை உத்தரவுகளையும் மீறும் சார்-பதிவாளர்களை கண்டுபிடிக்க, பதிவுத் துறை நடவடிக்கைளை தொடங்கியுள்ளது.

இது தொடர்பாக பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது, இந்த விவகாரத்தில் மனை விற்பனை பத்திரங்கள் குறித்த புள்ளி விபரங்களை திரட்ட அனைத்து டி.ஐ.ஜி.,க்கள், மாவட்ட பதிவாளர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றில் 2017 ஜூன் 22-க்கு பின்பு சார்-பதிவாளர் அலுவலக வாரியாக, மனை விற்பனையில் பதிவான பத்திரங்களின் விபரங்களை உடனே அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

மேலும் மொத்த மனை பத்திரங்கள், அங்கீகாரம் உள்ளவை, அங்கீகாரம் இல்லாதவை, ரியல் எஸ்டேட் சட்டபதிவு உள்ளவை, இல்லாதவை என 10 வித தலைப்புகளில் பட்டியலிட்டு அனுப்ப வேண்டும். அதன்படி உண்மையான விபரங்கள் தலைமையகத்துக்கு வந்தால் சம்பந்தப்பட்ட சார் – பதிவாளர்கள் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாவர் என்பதால், விதிமீறும் சார் – பதிவாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர் என்று அவர் கூறினார்.

Categories

Tech |