கொரோனா தொற்றை கட்டுப்படுத்த 3-வது தவணை தடுப்பூசி செலுத்துவதன் மூலமாக ஒமிக்ரான் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதிலிருந்து 88 % பாதுகாப்பு கிடைப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து பிரிட்டனில் நடத்தப்பட்ட ஆய்வில் முடிவுகளை சுகாதார பாதுகாப்பு முகமை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வு தொடர்பாக அமெரிக்காவை சேர்ந்த மூலக்கூறு மருத்துவப் பேராசிரியர் எரிக் டோபோல் ட்விட்டரில் தெரிவித்துள்ளதாவது, வேகமாக பரவும் தன்மை கொண்ட ஒமிக்ரான் வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் நிலையில் இருந்து 3-வது தவணை தடுப்பூசி பெரும் பாதுகாப்பு அளிக்கிறது.
2-வது தவணை தடுப்பூசிக்கு பின் ஒமிக்ரான் பாதிப்பு காரணமாக தடுப்பூசியின் செயல்திறன் 6 மாதங்களில் 52 சதவீதமாக குறைந்து விடுகிறது. அதேசமயம் 3-வது தவணை தடுப்பூசி மூலம் தடுப்பூசியின் செயல் திறனானது 52 சதவீதத்தில் இருந்து 80 சதவீதமாக அதிகரிக்கிறது என தெரிவித்துள்ளார். பிரிட்டனில் மேற்கொள்ளப்பட்ட இந்த இரு ஆய்வுகள் மூலமாக இந்த முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்துள்ளனர். தடுப்பூசி போடாதவர்களுடன் ஒப்பிடுகையில், 3 தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டாலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அபாயத்தை வெகுவாக குறைப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.