தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வந்தது. தற்போது கொரோனா வகை உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மக்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் கொரோனா உயர்வு மற்றும் ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மருத்துவத் துறை உயரதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இன்று காலை 11 மணியளவில் ஆலோசனை நடத்தி வருகிறார். இதில், இரவு ஊரடங்கு, கோவில்களில் பொதுமக்களுக்கு கட்டுப்பாடு விதிப்பது, பள்ளிகளுக்கு விடுமுறை, கல்லூரி வகுப்புகளை முறைப்படுத்துவது, கடைகள் செயல்படும் நேரம் குறைப்பு உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.