நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இதனிடையே உருமாறிய கொரோனா வகை ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.
இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தின் பாட்டியாலா ராஜிந்திரா அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் 60-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் 30 MBBS மாணவர்கள் என ஏறக்குறைய 100 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்களே இந்த அளவு பாதிக்கப்பட்டால் மற்ற நோயாளிகளை கவனிப்பதில் பெரும் சிக்கல்கள் ஏற்படும் என்று மாவட்ட தொற்று நோயியல் நிபுணர் டாக்டர் சுமீத் சிங் அச்சம் தெரிவித்துள்ளார்.