வாலிபரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த வழக்கில் 4 பேரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மேற்கு மரியநாதபுரம் பகுதியில் மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராகேஷ் குமார் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராகேஷ் குமார் பாலகிருஷ்ணாபுரம் பகுதியிலுள்ள செட்டிகுளத்தில் மீன் பிடிக்கும் குத்தகையை தனது தந்தையின் பெயரில் எடுத்துள்ளார். இரவு நேரத்தில் குளத்து பகுதியில் ராகேஷ் குமார் தனது நண்பர்களுடன் காவல் பணியில் ஈடுபடுவது வழக்கம். இந்நிலையில் வழக்கம்போல ராகேஷ் குமார் தனது நண்பர்களுடன் குளத்திற்கு அருகில் இருக்கும் திட்டில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் சில மர்ம நபர்கள் அங்கு சென்றுள்ளனர்.
இதனை அடுத்து அந்த மர்ம நபர்கள் ராகேஷ் குமாரை துப்பாக்கியால் சுட்டனர். இதனால் ராஜேஷ்குமாரின் வயிற்றில் விலா எலும்புக்கு கீழ் குண்டுகள் பாந்துள்ளது. இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த ராகேஷ் குமாரின் நண்பர்கள் உடனடியாக அவரை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு செல்ல முயற்சித்துள்ளனர். இதனால் கோபமடைந்த மர்மநபர்கள் அவர்களை பின்தொடர்ந்து சென்று ராஜேஷ்குமாரின் தலையில் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனை தடுக்க முயன்ற அவரது நண்பர்களையும் தாக்கிவிட்டு மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதனையடுத்து நீண்ட போராட்டத்திற்கு பிறகு ராகேஷ் குமாரின் நண்பர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் குளத்தை குத்தகைக்கு எடுத்தது தொடர்பாக ராகேஷ் குமாருக்கும், அதே பகுதியில் வசிக்கும் பிரகாஷ் என்பவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்தது தெரியவந்துள்ளது.
எனவே பிரகாஷின் நண்பர்களான மரிய பிரபு, ஜான் சூர்யா, கணேசமூர்த்தி ஆகிய 3 பேருக்கும் இந்த கொலை சம்பவத்தில் தொடர்பு இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து தனிப்படை காவல்துறையினர் பிரகாஷ் உட்பட 4 பேரையும் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்த 2 அரிவாள்கள் மற்றும் நாட்டு துப்பாக்கியை காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.