சாலையை சீரமைத்து தர வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ரெத்தினகோட்டை பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலைகள் தற்போது குண்டும், குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் பழுதடைந்த சாலையை சீரமைத்து தர வலியுறுத்தி பொதுமக்கள் அறந்தாங்கி-பேராவூரணி சாலையில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த அறந்தாங்கி தாசில்தார் காமராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் அசோகன் மற்றும் காவல்துறையினர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது சாலையை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்த பிறகு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.