உத்தரபிரதேசம், பஞ்சாப், மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநிலங்களில் இந்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. அதனால் 5 மாநிலங்களில் மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதிலும் பிரதமர் மோடி கவனம் செலுத்தி வருகிறார். அதன்படி இன்று மணிப்பூர் சென்றுள்ள பிரதமர் ரூ.4,800 கோடி மதிப்பிலான 22 வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், ஒரு காலத்தில் மணிப்பூர் தனித்து விடப்பட்டிருந்தது. நான் பிரதமராக பதவி ஏற்பதற்கு முன்பு பலமுறை இங்கு வந்திருக்கிறேன். அப்போது இங்குள்ள மக்கள் மனதில் சுமந்த துயரங்களை கேட்டு அறிந்தேன். 2014-ம் ஆண்டுக்கு பிறகு மொத்த இந்திய அரசையும் உங்கள் வாசலுக்கே கொண்டு வந்துள்ளேன்.
சில வருடங்களுக்கு முன்பு மணிப்பூரில் 6% மக்களுக்கு மட்டுமே வீட்டில் குழாய் வழியாக குடிநீர் கிடைத்தது. ஆனால் தற்போது ‘ஜல் ஜீவன்’ திட்டத்தின் மூலம் 60% மக்களுக்கு குழாய் நீர் கிடைத்துள்ளது. நீங்கள் மணிப்பூரில் நிலையான உறுதியான அரசை தேர்ந்தெடுத்து உள்ளீர்கள். பாஜக அரசு உங்களுக்காக பெரும்பான்மை பலத்துடனும் முழு ஆற்றலுடனும் இயங்கி வருகிறது. அதனை தொடர்ந்து சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்கு பிறகும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ள ஒரு சிகரம் ‘ஹாரியட்’ என்று அழைக்கப்படுகிறது. நாங்கள் அதன் பெயரை ‘மணிப்பூர் மலை’ என மாற்ற இருக்கிறோம். இதற்கு முன் இருந்த அரசாங்கம் ‘கிழக்கு பக்கம் பார்க்க வேண்டும்’ என்ற ஒரே ஒரு கொள்கை மட்டுமே வைத்திருந்தது. ஆனால் நாங்கள் கிழக்கு மாநிலங்களுக்கு பணியாற்றுவோம் என்ற கொள்கையை வைத்திருக்கிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.