மருமகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த தொழிலாளியை மகன் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள விருதாசம்பட்டி பகுதியில் நெசவு தொழிலாளியான ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு வீரமணி, நரசிம்மன் என்ற 2 மகன்களும், 1 மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் ராஜேந்திரன் தனது மூத்த மகனான வீரமணியின் மனைவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் வீரமணியிடம் உங்கள் தந்தை எனக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கிறார். எனவே நாம் தனியாக குடும்பம் நடத்தலாம் என கூறியுள்ளார். அதன்பிறகு கோபத்தில் வீரமணியின் மனைவி அவரது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் வீரமணி தனது மனைவிக்கு பாலியல் தொந்தரவு அளித்தது குறித்து ராஜேந்திரனிடம் தட்டி கேட்டுள்ளார்.
இதனால் கோபமடைந்த ராஜேந்திரன் மருமகள் குறித்து தகாத வார்த்தைகளால் திட்டியதால் தந்தை, மகனுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது வீரமணி வீட்டில் இருந்த சிமெண்ட் கல்லை எடுத்து ராஜேந்திரனின் கால்கள் மீது போட்டுள்ளார். மேலும் கட்டையால் அவரது தலையில் அடித்து, அம்மிக்கல் மீது ராஜேந்திரனை தள்ளியுள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த ராஜேந்திரனை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே ராஜேந்திரன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வீரமணியை கைது செய்துள்ளனர்.