கருகலைப்பு செய்யும் போது பெண் உயிரிழந்த சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தேனி மாவட்டம் உப்புக்கோட்டை பகுதியில் பாண்டிய பாபு என்பவர் வசித்து வருகின்றார். கூலி தொழிலாளியான இவருக்கு இந்திராணி என்ற மனைவியும். 2 வயதில் ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் இந்திராணி இரண்டாவதாக கர்ப்பம் அடைந்துள்ளார். இதற்காக அரண்மனைபுதூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அப்போது பரிசோதனை செய்த மருத்துவர் ஒருவர் கருவின் வளர்ச்சி குறைவாக இருப்பதனால் கருவை கலைத்து விடுமாறு இந்திராணியிடம் கூறியுள்ளார். இதற்கு இந்திராணியும் சம்மதம் தெரிவித்ததால் அதே மருத்துவமனையில் அவருக்கு கருகலைப்பு நடந்துள்ளது.
இதனையடுத்து கருகலைப்பு செய்யும்போது இந்திராணியின் உடல்நிலை திடீரென மோசமடைந்துள்ளது. இதனால் தனியார் மருத்துவமனையில் இருந்து இந்திராணியை மேல் சிகிச்சைக்காக தனியார் தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் இந்திராணி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த இந்திராவின் கணவர் பாண்டியபாபு உடனடியாக பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இந்திராணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இதற்கிடையே இந்திராணி இறந்ததை அறிந்த உறவினர்கள் 100க்கும் மேற்பட்டோர் உடனடியாக தேனி அரசு மருத்துவமனைக்கு திரண்டு சென்று உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அவர்கள் இந்திராணியின் சாவில் மர்மம் இருப்பதாகவும், தனியார் மருத்துவமனையின் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோஷங்களை எழுப்பியுள்ளனர். இதனை அறிந்து சென்ற துணை சூப்பிரண்டு அதிகாரி பால்சுதின் மற்றும் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய பின்னரே இந்திராவின் உடலை வாங்கிக்கொண்டு உறவினர்கள் கலைந்து சென்றுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.