தற்போது அதிகரித்து வரும் விலைவாசிக்கு மத்தியில் மாத வருமானம் போதாத நிலையில் இருக்கிறது. இந்நிலையில் கொரோனா பரவல் தாக்கத்தால் விதிக்கப்பட்ட ஊரடங்கின் விளைவாக பெரும்பாலானோர் தங்களின் வேலைகளை இழந்து மிகவும் அவதிப்பட்டனர். ஏனென்றால் வேலையினால் கிடைக்கக்கூடிய மாத ஊதியம் இன்றி அத்தியாவசிய பொருட்களை கூட வாங்கி பயன்படுத்த முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்க தொடங்கியதும் மீண்டும் வேலைவாய்ப்புகளை தேடி அலைய தொடங்கினர்.
இவர்களுக்கு உதவும் அடிப்படையில் மாவட்டம் தோறும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த அரசு அனுமதி வழங்கியது. இதனையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் முன்னணி தனியார் நிறுவனங்கள் வேலை வாய்ப்புகளை வழங்க முன் வந்தது. அரசு வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் 100-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்று வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகின்றனர். மற்ற மாவட்டங்களை தொடர்ந்து ஜனவரி 8ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சாலையிலுள்ள காமராஜர் கல்லூரியில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் பட்டப்படிப்பு, பட்டயப் படிப்பு ஆகிய கல்வித்தகுதிகளை உடையோர் கலந்து கொண்டு வேலைவாய்ப்புகளை பெறலாம். இந்த முகாம் மூலமாக தனியார் துறைகளில் பணி ஆணை பெறுவோரின் அரசு வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. இந்த முகாமில் கலந்துகொள்ள வருவோர் தங்களது சுயவிவரக்குறிப்பு, கல்வித்தகுதி சான்றிதழ், ஆதார் அட்டை போன்றவற்றின் நகல்களை எடுத்து வர வேண்டும்.