மின் கம்பத்தில் ஏறிய விவசாயி மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியை அடுத்துள்ள மேலச்செல்வனூர் கிராமத்தில் சோமசுந்தரம் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அவரது வீட்டில் மின்சாரம் திடீரென தடைபட்டுள்ளது. எனவே மின் இணைப்பில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டிருக்கும் என நினைத்து, அதனை சரி செய்வதற்காக அருகே இருந்த மின் கம்பத்தில் ஏற நினைத்துள்ளார். அப்போது அங்கிருந்த 4 டிரான்ஸ்பார்மர்களில் இருந்த தவறான டிரான்ஸ்பார்மரை அணைத்துவிட்டு மின்கம்பத்தில் ஏறியுள்ளார்.
இதனையடுத்து சோமசுந்தரம் மின்வயரை தொட்டதும் அவர் மீது மின்சாரம் பாய்ந்து மின்கம்பத்தில் தொங்கியபடியே உயிரிழந்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதியினர் உடனடியாக சாயல்குடி தீயணைப்பு துறையினருக்கும், கடலாடி காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் மின் இணைப்பை துண்டித்து மின்கம்பத்தில் பிணமாக தொங்கிய சோமசுந்தரத்தின் உடலை கீழே கொண்டு வந்தனர்.
இதனையடுத்து கடலாடி காவல்துறையினர் சோமசுந்தரத்தின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.