ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு சார்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது.
ராணிபேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் ஒன்றியத்திற்குட்பட்ட 40 ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு சார்பாக அவசர ஆலோசனை கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு கூட்டமைப்பு தலைவர் கார்த்திக் தலைமை தாங்கி உள்ளார். இதில் செயலாளர் வெங்குபட்டு பாலசந்தர் முன்னிலை வகித்துள்ளார்.
இந்நிலையில் ஆலோசனை கூட்டத்தில் வைத்து வட்டார வளர்ச்சி அலுவலரான அன்பரசன் என்பவர் தொகுப்பு வீடுகளை வழங்குவதற்கு ஊராட்சி மன்ற தலைவர்கள் மூலமாக ஒரு வீட்டுக்கு 20 ஆயிரம் ரூபாய் கேட்பதாக பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்து கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் ஒன்றிய குழு தலைவர் கலைக்குமார் அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. ஆனால் அலுவலர் அன்பரசன் ஊராட்சி மன்றத்தின் தலைவர்களுக்கு பணம் கேட்டு எந்த அழுத்தமும் தரவில்லை என கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்து அவரை வேறு இடத்திற்கு மாற்றம் செய்வது ஏற்புடையது அல்ல. ஆகையால் பொய்யான குற்றச்சாட்டின் அடிப்படையில் வட்டார வளர்ச்சி அலுவலரை வேறு இடத்திற்கு மாற்றக் கூடாது என்றும், ஊராட்சி மன்ற தலைவர்களின் உரிமைகளிலும் மற்றும் பணிகளிலும் ஒன்றிய குழு தலைவரும் ஒன்றிய குழு உறுப்பினர்களும் தலையிடக்கூடாது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் இந்த தீர்மானங்கள் கலெக்டர் மற்றும் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு அளிக்க கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக ஊராட்சி மன்ற தலைவர் கூட்டமைப்பு நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.