முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவின் மற்றும் அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 கோடிக்கும் மேல் மோசடி செய்துள்ளதாக புகார்கள் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து தலைமறைவான ராஜேந்திர பாலாஜியை காவல்துறையினர் 8 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். இருப்பினும் ராஜேந்திர பாலாஜியை இன்றளவும் காவல்துறையினரால் நெருங்கவே முடியவில்லை. மேலும் அவர் சிம்கார்டை அடிக்கடி மாற்றி வழக்கறிஞர்களுடன் பேசி வருவதாக காவல்துறையினர் தரப்பில் சொல்லப்படுகிறது.
இதற்கிடையே கட்சி தலைவர்கள் பலரும் ராஜேந்திர பாலாஜியை கைது செய்தே ஆக வேண்டும் என்று கூறி வருகின்றனர். இந்த நிலையில் ராஜேந்திர பாலாஜியை இன்றளவும் நெருங்க முடியாமல் இருப்பதால் காவல்துறையில் இருந்து ஏதேனும் அவருக்கு ரகசிய தகவல்கள் கசிகிறதா என்ற சந்தேகம் உயர் அதிகாரிகளுக்கு எழுந்துள்ளது. எனவே முதலில் அதை கண்டுபிடித்து விட்டால் ராஜேந்திர பாலாஜி விரைவில் சிக்கி விடுவார் என்று உயர் அதிகாரிகள் கூறுகின்றனர்.