நாடு முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்ததால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது. அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் ஒரு சில மாநிலங்களில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்தியாவில் கொரோனா 3ஆம் அலை துவங்கி உள்ளது என்று கொரோனா நிபுணர் குழு தலைவர் அரோரா தெரிவித்துள்ளார். கடந்த ஒரு வாரத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பதை குறிப்பிட்ட அவர், 3 ஆம் அலை குறித்து யாரும் பயப்படத் தேவையில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் 15 முதல் 18 வயது சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை வரவேற்ற அவர், நாட்டில் சுகாதாரத்துறை வலிமையடைந்துள்ளது என்றும் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் மக்கள் அனைவரும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.