11 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவர் சிகிச்சைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சென்னை மாவட்டத்திலுள்ள ஆவடி பகுதியில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 50 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் சுற்றி திரிந்துள்ளார். இவரை உதவும் கரங்கள் அமைப்பினர் மீட்டு திருவேற்காட்டில் இருக்கும் மையத்தில் வைத்து மனநல சிகிச்சை அளித்துள்ளனர். இதனையடுத்து 3 மாத சிகிச்சைக்கு பிறகு அந்த நபர் மனநல பாதிப்பில் இருந்து சற்று மீண்டுள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த சத்திய நாராயணன் ஜெய்ஸ்வால் என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் மேற்கு வங்க மாநில தன்னார்வ அமைப்பின் உதவியுடன் சமூக வலைதளம் மூலம் சத்திய நாராயணனின் உறவினர்கள் அவரை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.
அப்போது கடந்த 2010-ஆம் ஆண்டில் சத்யநாராயணன் காணாமல் போனது தெரியவந்துள்ளது. அதன் பின் கடந்த 2014-ஆம் ஆண்டு காவல்நிலையத்தில் அவரது உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் சுமார் 11 ஆண்டுகளுக்கு பிறகு உதவும் கரங்கள் அமைப்பினர் சத்தியநாராயணனை அவரது உறவினர்களிடம் ஒப்படைத்துவிட்டனர். அதன்பின் சத்யநாராயணனின் உறவினர்கள் உதவும் கரங்கள் அமைப்பின் நிறுவனர் பாப்பா எஸ். வித்யாகர், சமூக ஆர்வலர்கள் சீனிவாசராவ், சந்திரிகா, ஜேக்கப் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.