உரிமம் இல்லாமல் துப்பாக்கி கொண்டு வந்த கேரள காங்கிரஸ் பிரமுகரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு மாவட்டத்தில் காங்கிரஸ் பிரமுகரான கே.எஸ்.பி.ஏ தங்கல் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணை தலைவராக இருக்கிறார். இந்நிலையில் தங்கல் பெங்களூரு செல்வதற்காக கோவை விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவரது சூட்கேசை ஸ்கேன் செய்து பார்த்தபோது அதில் 7 தோட்டாக்களுடன் துருப்பிடித்த நிலையில் கைத்துப்பாக்கி ஒன்று இருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து கோவை பீளமேடு காவல்துறையினர் தங்கலிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
அந்த விசாரணையில் தான் நடத்தி வரும் பள்ளிக்கூட மாணவர்களுக்கு சீருடை வாங்குவதற்காக விமானத்தில் பெங்களூரு சென்று அங்கிருந்து அமிர்தசரஸ் செல்வதற்காக விமான நிலையம் வந்ததாக தங்கல் கூறியுள்ளார். அந்த கைத்துப்பாக்கி அவரது தந்தை வைத்திருந்தது எனவும், அவசரமாக புறப்பட்டதால் துப்பாக்கி இருந்த பையை மாற்றி எடுத்து வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கைத்துப்பாக்கி வைத்திருக்க அவரிடம் உரிமம் இல்லாததால் காவல்துறையினர் ஆயுத தடைச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.